நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அரசியல் நிலைத்தன்மையும் வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பானுக்குச் சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுவதாக மனிதவள அமைச்சரும் பி.கே.ஆர். தேசிய உதவித் தலைவருமான டத்தோ ஸ்ரீ ரமணன் ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

ரிங்கிட்டின் மதிப்பு வலுவடைந்துள்ளதுடன், அந்நிய முதலீடுகளின் வருகையும் அதிகரித்துள்ளதைப் போன்ற மடானி அரசாங்கத்தின் நான்கு ஆண்டுகால சாதனைகளைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மக்களிடம் தெளிவாக எடுத்துரைக்க வேண்டும் என்றார்.

இன்று மலாக்கா, மாச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதி வேட்புமனுத் தாக்கல் மையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரமணன், தேர்தல் முடிவுகளை இப்போதே கணிக்க முடியாது என்றும், அரசியல் கூட்டணிகள் முன்வைக்கும் கொள்கைகள், திட்டங்கள் மற்றும் வாக்குறுதிகளை மக்கள் எவ்வாறு ஏற்றுக் கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே வெற்றி அமையும் என்றும் குறிப்பிட்டார்.

எனவே, பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் இயந்திரம் களத்தில் தீவிரமாகச் செயல்பட்டு, அரசாங்கத்தின் சாதனைகளையும் மக்களுக்காக முன்னெடுக்கப்பட்ட திட்டங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

மேலும், எதிர்காலத்தில் செயல்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் மக்களுக்கு விளக்க வேண்டும். குறிப்பாக, அரசாங்கத்தின் சாதனைகள் குறித்த தகவல்கள் அடிமட்ட மக்களையும் சென்றடைவதை உறுதிப்படுத்துவது அவசியம் என்றார்.

இதனிடையே, ரமணன், கல்வி அமைச்சர் பாட்லீனா சீடேக், டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில், டாக்டர் மஸ்லி மாலிக் ஆகியோர் மாச்சாப் ஜெயா தொகுதியின் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் டத்தோ ஜிங் லிம்மை வேட்புமனுத் தாக்கல் மையத்திற்கு அழைத்து வந்தனர்.

மாச்சாப் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது.








