மலாக்கா மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைத்தால், முன்னாள் முதலமைச்சர் அட்லி ஸஹாரி மீண்டும் முதலமைச்சராக நியமிக்கப்படுவார் என அக்கூட்டணி அறிவித்துள்ளது.
இந்த அறிவிப்பை பக்காத்தான் ஹராப்பானின் தேர்தல் இயக்குநர் அமிருடின் ஷாரி இன்று வெளியிட்டுள்ளார்.
முதலமைச்சர் பதவிக்கு அட்லி ஸஹாரியே சிறந்த தேர்வு என்றும், அவருடன் மேலும் சில தகுதியானவர்கள் இருந்தாலும், கூட்டணியின் ஒருமித்த கருத்தாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலில் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி பக்காத்தான் ஆட்சியமைக்கும் வாய்ப்பைப் பெற்றால் இந்த நியமனம் சாத்தியமாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், இத்தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் வலுவான போட்டியை வழங்கும் என்ற நம்பிக்கையையும் அவர் வெளிப்படுத்தினார்.
இதற்கிடையில், புக்கிட் கத்தில் சட்டமன்றத் தொகுதியில் மூன்றாவது முறையாகப் போட்டியிடும் அட்லி ஸஹாரி, பெரிக்காத்தான் நேஷனல், பெர்சாமா மற்றும் சுயேச்சை வேட்பாளர் என நான்கு முனைப் போட்டியை எதிர்கொள்கிறார்.
கடந்த 2021ஆம் ஆண்டு நடைபெற்ற மலாக்கா மாநிலத் தேர்தலில், அமானா கட்சியின் துணைத் தலைவரான அட்லி ஸஹாரி, பாரிசான் நேஷனல், பெரிக்காத்தான் நேஷனல் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களைத் தோற்கடித்து 1,057 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.
அட்லி ஸஹாரி கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் 2020-ஆம் ஆண்டு வரை மலாக்கா மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








