Jun 25, 2026
Thisaigal NewsYouTube
முஹிதீன் ஊழல் வழக்கு: டிக்டாக்  வீடியோக்களை ஆதாரமாகக் கொள்வதா? - தற்காப்புத் தரப்பு கடும் எதிர்ப்பு
அரசியல்

முஹிதீன் ஊழல் வழக்கு: டிக்டாக் வீடியோக்களை ஆதாரமாகக் கொள்வதா? - தற்காப்புத் தரப்பு கடும் எதிர்ப்பு

Share:

முன்னாள் பிரதமர் டான்ஸ்ரீ முஹிதீன் யாசின் மீதான ஊழல் வழக்கில், அரசுத் தரப்பு சாட்சி சமர்ப்பித்த டிக்டாக் வீடியோக்களின் நம்பகத்தன்மை குறித்து தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர்கள் இன்று கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதிமன்றத்தில் கடும் கேள்வி எழுப்பினர்.

இன்றைய விசாரணையில், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான SPRM உதவி அமலாக்க அதிகாரி முகமது சவாலுடின் சாயிட் சாட்சியமளித்தார். பெர்சத்து கட்சியின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டதை முஹிதீன் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படும் இரண்டு டிக்டாக் வீடியோக்களை அவர் ஆதாரமாகச் சமர்ப்பித்தார். அப்போது, அந்த வீடியோக்களை விவரிக்கும்போது 'லஞ்சம்' என்ற சொல்லை அதிகாரி பயன்படுத்தினார்.

இதற்கு உடனடியாக எதிர்ப்பு தெரிவித்த தற்காப்புத் தரப்பு வழக்கறிஞர்

டத்தோ அமீர் ஹம்சா அர்ஷாத், "அந்த வீடியோக்களில் 'லஞ்சம்' அல்லது 'ஊழல்' என்ற சொல் எங்குமே பயன்படுத்தப்படவில்லை. இது சாட்சியின் சொந்த விளக்கம். உண்மைகளை மட்டும் பேசுங்கள். டிக்டாக் வீடியோக்களை ஆதாரமாகக் கொள்வதுதான் நமது அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் தரமா?" என்று காரசாரமாகக் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து குறுக்கு விசாரணை செய்த அமிர் ஹம்சா, அந்த வீடியோக்களில் உள்ள தலைப்புகள் மற்றும் ஹேஷ்டேக்குகளை உருவாக்கியது யார் என்று விசாரணை நடத்தப்பட்டதா எனக் கேட்டார். அதற்கு 'இல்லை' எனப் பதிலளித்த அதிகாரியிடம், "இப்போதெல்லாம் செயற்கை நுண்ணறிவு மூலம் போலியான வீடியோக்களை உருவாக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஒரு வீடியோவின் உண்மைத்தன்மையை ஆராயாமல் அது AI மூலம் உருவாக்கப்பட்டதா இல்லையா என்பதை உங்களால் சொல்ல முடியுமா?" எனக் கேட்டார். அதற்கு அந்த அதிகாரி, "என்னால் சொல்ல முடியாது" என்று ஒப்புக்கொண்டார்.

இதற்குப் பதிலளித்த தலைமை அரசுத் தரப்பு வழக்கறிஞர் டத்தோ வான் ஷாஹருதீன் வான் லாடின் "நாங்கள் டிக்டாக் வீடியோக்களை மட்டுமே ஆதாரமாக நம்பியிருக்கவில்லை, இன்னும் பிற ஆதாரங்கள் உள்ளன" எனத் தெரிவித்தார்.

சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக வீடியோ சேகரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டதால், நீதிபதி நூர் ருவேனா முகமது நூர் டின் நகைச்சுவையாக, "சரி, எப்போதுதான் அந்த வீடியோவைப் பார்ப்பது? நான் ஒரு மணி நேரமாகக் காத்திருக்கிறேன்" என்று கூறியது நீதிமன்றத்தில் சிரிப்பலை ஏற்படுத்தியது.

79 வயதான முஹிதீன் யாசின், பெர்சத்து கட்சிக்கு 232.5 மில்லியன் ரிங்கிட் பெற்றுத் தந்ததாக அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டையும், 200 மில்லியன் ரிங்கிட் சட்டவிரோதப் பணப்பரிமாற்றக் குற்றச்சாட்டையும் எதிர்கொண்டுள்ளார். நஜிப் ரசாக்கிற்குப் பிறகு ஊழல் வழக்கில் நீதிமன்றக் கூண்டில் ஏறும் இரண்டாவது முன்னாள் பிரதமர் இவராவார்.

Related News