ரி டி ஜெனிரோ, நவ.18-
வெளிநாட்டில் உள்ள மலேசியர்கள் உட்பட அனைத்து மலேசியர்களும் அரசாங்கத்தின் அனைத்து ஆக்கப்பூர்வமான முயற்சிகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிக்குமாறு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசாங்கம் தற்போது ஒரு வலிமைமிகுந்த குழுவை கொண்டுள்ளது. ஒட்டுமொத்த மக்களுக்கு நன்மை பயக்கும் கொள்கைகளை செயல்படுத்துவதற்கு இந்த குழு கடுமையாக உழைக்கும் என்று பிரதமர் உறுதி அளித்துள்ளார்.
லஞ்ச ஊழல் மற்றும் மக்களின் சொத்துகளையும், அவர்களின் நிதி வளங்களையும் சூரையாடும் எந்தவொரு தரப்பினருடனும் தமது தலைமையிலான மடானி அரசாங்கம் சமரசம் கொள்ளாது என்று பிரதமர் உறுதி அளித்தார்.
மலேசியாவின் நிதி அமைச்சர் என்ற முறையில் நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வருவதற்கு தாம் உறுதிப்பூண்டு இருப்பதையும் அன்வார் சுட்டிக்காட்டினார்.
பல நாடுகளுக்கு தம்முடைய தொடர் பயணமானது, இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் என்பதுடன் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மலேசிய மக்களுக்கு சாதகமான அனுகூலத்தை ஏற்படுத்தும் என்று பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
பிரேசில் தலைநர் ரி டி ஜெனிரோ விற்கு மேற்கொண்டுள்ள அதிகாரத்துவ வருகை மற்றும் ஜி20 உச்சநிலை மாநாட்டு பங்கேற்பின் போது, மலேசிய செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோஸ்ரீ அன்வார் இதனை குறிப்பிட்டார்.








