கோலாலம்பூர், டிச.16-
இவ்வாண்டு நவம்பர் மாதம் வரையில் பத்து லட்சத்து ஒன்பது ஆயிரத்து 114 இந்திய சுற்றுப்பயணிகளை மலேசியா ஈர்த்தது மூலம் இந்திய சுற்றுப்பயணிகள் வருகைக்கு அரசாங்கம் கொண்டிருந்த இலக்கு, நிறைவேறியுள்ளது என்று சுற்றுலா, கலை, பண்பாட்டுத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
கோவிட் 19 நோய் பரவலுக்கு முன்பு 2019 ஆம் ஆண்டில் இதேகாலக்கட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இந்திய சுற்றுப்பயணிகளின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது 47 விழுக்காடு உயர்வாகும் என்று அமைச்சர் தியோங் கிங் சிங் குறிப்பிட்டார்.
2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 71.7 விழுக்காடு அதிகரித்துள்ள நிலையில் இந்திய சுற்றுப்பயணிளின் மனம் கவர்ந்த சுற்றுலா வழித்தடங்களில் மலேசியாவும் முன்னணி வகிக்கிறது என்பதையே இது பிரதிபலிக்கிறது என்று என்று தியோங் கிங் சிங் தெரிவித்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், இந்திய சுற்றுப்பணிகளுக்கு மலேசியா அறிவித்த இலவச விசா சலுகை, இந்த அதிகரிப்புக்கு முக்கிய காரணமாகும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
தவிர இந்தியாவின் விமான நிறுவனங்களில் ஒன்றாக Indigo Airlines, கோலாலம்பூருக்கு அப்பாற்பட்ட நிலையில் லங்காவிற்கு நேரடி விமானச் சேவையை அறிமுகப்படுத்தியது, இந்திய சுற்றுப்பயணிகளின் அதிகரிப்புக்கு மற்றொரு காரணமாகும் என்பதையும் தியோங் கிங் சிங் விளக்கினார்.