டிச. 11-
சமய நல்லிணக்கத்தைப் பேணுவதற்குப் புதிய சட்டத்தைக் கொண்டுவர அரசு திட்டமிடவில்லை. ஏனெனில், ஏற்கனவே உள்ள அவதூறு தடுப்புச் சட்டம் 1948, தகவல் தொடர்பு பல்லூடகச் சட்டம் 1998, குற்றவியல் சட்டங்கள் ஆகியன சமய நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள போதுமானதாக உள்ளது என ஒற்றுமைத் துறை துணை அமைச்சர் சரஸ்வதி தெரிவித்தார்.
ஏற்கனவே உள்ள சட்டங்கள் மூலம், இனம், சமயநல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நபர்களை விசாரிக்கவும், குற்றஞ்சாட்டவும் ஆதிகாரிகள் அதிகாரம் பெற்றுள்ளனர். இருப்பினும், தேவைப்பட்டால், ஏற்கனவே உள்ள சட்டங்களை திருத்த அரசு தயாராக உள்ளது என்றார்.
வெறுப்புணர்வை ஏற்படுத்தும் அறிக்கைகளையும் கருத்துகளையும் தடை செய்யும் அதிகாரம் ஒற்றுமை அமைச்சுக்கு உள்ளது. காவல் துறை போன்ற சட்ட அமலாக்க அமைப்புகளும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும், மத நல்லிணக்கம் பேணப்படவும் முக்கிய பங்கு வகிக்கின்றன என்றார் அவர்.
இன்று, நம்பிக்கைக் கூட்டணியின் உறுப்புக் கட்சியான ஜசெக-வைச் சேர்ந்த ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்ப்னர் ஆர்.எஸ்.என் ராயர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கயில் துணை அமைச்சர் சரஸ்வதி இவ்வாறு கூறினார். நாட்டில் சமீப காலமாக அதிகரித்து வரும் மத சர்ச்சைகளைத் தீர்க்க அரசு தொடர்புடைய சட்டத்தை இயற்றுமா என்று ஆர்.எஸ்.என் ராயர் கேள்வி எழுப்பி இருந்தார்.