கோலாலம்பூர், டிசம்பர்.01-
நாளை டிசம்பர் 2-ஆம் தேதி, தனது இரண்டாவது செனட்டர் பதவிக் காலத்தை நிறைவு செய்யும், முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழிற்துறை அமைச்சரான தெங்கு டத்தோ ஶ்ரீ ஸாஃப்ருல் அப்துல் அஸிஸ் நாடாளுமன்றத்தில் புதிய பதவி ஏற்கவுள்ளார்.
வரும் புதன்கிழமை பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அவருக்கான புதிய பதவியை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் செனட்டராகப் பதவி வகித்து வரும் அவர், நாளையோடு தனது ஆறு ஆண்டுகள் பதவிக் காலத்தை நிறைவு செய்கின்றார்.
கடந்த 2020-ஆம் ஆண்டு, அப்போதைய பிரதமர் முகைதீன் யாசினின் அமைச்சரவையில் முதன் முதலாக செனட்டராகப் நியமிக்கப்பட்ட தெங்கு ஸாஃப்ருல், அதன் பின்னர் கடந்த 2022-ஆம் ஆண்டு, இரண்டாவது தவணையாக செனட்டராக நியமிக்கப்பட்டார்.
மேலும், அவர் டத்தோ ஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கம் உட்பட பல நிர்வாகங்களில் பணியாற்றியுள்ளார்.
இதனிடையே டிசம்பர் 2-ஆம் தேதி, தனது பதவிக் காலம் நிறைவடைந்ததும், அப்பதவியில் மற்றவர்களுக்கு வழி விடுவதாக கடந்த நவம்பர் 13-ஆம் தேதி, பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் அவர் கோரிக்கை விடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.








