பினாங்கு, டிச. 7-
இந்நாட்டில் மலாய்க்காரர்களைப் போல பூமிபுத்ரா அந்தஸ்து கோரி, தாங்கள் செய்து கொண்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படுவதாக கூறியுள்ள மலேசிய இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் விண்ணப்பத்தை ஆராயும்படி உள்துறை அமைச்சை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டுக்கொண்டுள்ளார்.
பூமிபுத்ரா அந்தஸ்து கோரும் இந்திய முஸ்லிம் சமுதாயத்தின் விண்ணப்பம் நடப்பு அரசியலமைப்பு சட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப ஆராயப்படும். தனிநபர் மதிப்பீட்டில் அடிப்படையில் இவ்விவகாரத்தில் கவனம் செலுத்தப்படுமே தவிர ஒரு குழுவினராக அல்லது ஒரு சங்கமாக மேற்கொள்ளப்படும் விண்ணப்பத்தின் அடிப்படையில் அல்ல என்று பிரதமர் தெளிவுபடுத்தினார்.
இவ்விவகாரத்தை ஆராய்வதற்கு குறிப்பிட்ட காலக்கெடு எதுவும் இல்லை என்றாலும் உள்துறை அமைச்சர் என்று முறையில் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் இவ்விவகாரத்தை கையாளுவார் என்று பிரதமர் தெரிவித்தார்.
நேற்று பினாங்கில் பழமை வாய்ந்த பினாங்கு முஸ்லிம் லீக் சங்கத்தின் 70 ஆம் ஆண்டு கொண்டாட்ட விழா விருந்து நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றுகையில் டத்தோஸ்ரீ அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்திய முஸ்லிம் இளைஞர்களின் தொழில் முனைவோர் பயிற்சி மற்றும் அவர்களின் மேம்பாட்டுத்திட்டத்திற்காக சங்கத்திற்கு 2 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளிக்கான மானியத்தையும் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இந்நிகழ்வில் அறிவித்தார்.








