நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் மீண்டும் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் உருக்கமாகக் கேட்டுக்கொண்டுள்ளார். மத்திய அரசுடன் இணக்கமான ஒரு மாநில அரசு அமைந்தால் மட்டுமே, அரசியல் நிலைத்தன்மையை உறுதிப்படுத்தி, மக்கள் நலத்திட்டங்களை தடையின்றி செயல்படுத்த முடியும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
நெகிரி செம்பிலான் மாநில தேர்தலையொட்டி அம்பாங்கான் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய டத்தோஸ்ரீ அன்வார், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமினுடின் ஹரூண் தலைமையிலான நெகிரி செம்பிலான் அரசு, கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிப்படையான சிறந்த நிர்வாகத்தை வழங்கியுள்ளது என்று பாராட்டினார். எனவே, இனவாத உணர்வுகளைத் தூண்டி அரசியல் செய்பவர்களைப் புறக்கணித்து, நேர்மையான மற்றும் ஒழுக்கநெறி மிக்க பிரதிநிதிகளை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
மேலும், புத்ராஜெயாவில் உள்ள மத்திய அரசுடன் ஒரே நேர்க்கோட்டிலான சிந்தனையும் இலக்குகளும் கொண்ட ஒரு மாநில அரசு அமைந்தால், கூட்டரசு திட்டங்களையும் மானியங்களையும் மாநில மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது மிகவும் எளிதாகும் என்று பிரதமர் விவரித்தார். ஒரு நல்ல நிர்வாகத்தின் மூலமே மாநிலத்தின் வருவாயைப் பெருக்கி, அதன் பலன்களை மீண்டும் மக்களுக்கே நலத்திட்டங்களாகத் திருப்பிக் கொடுக்க முடியும் என்பதால், வாக்காளர்கள் அனைவரும் சிந்தித்து நல்லதொரு முடிவை எடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டார். இம்மாநிலத்தில் உள்ள 36 சட்டமன்றத் தொகுதிகளிலும் பக்காத்தான் ஹரப்பான் தனது வேட்பாளர்களை நிறுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.








