நெகிரி செம்பிலானில் நீடிக்கும் ஆட்சியாளர் விவகாரம் குறித்து ஆட்சியாளர்கள் மன்றம் தலையிட்டு ஆராய வேண்டும் என்று அந்த மாநிலத்தின் அரச மரபுகள் தொடர்பில் நிபுணத்துவம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எமிருல் சரிஃபுடின் நோர் அஸ்மி, அஸ்மாவி இஸ்மாயில் மற்றும் டெய்ன் ரா நூர் அஸ்மி ஆகியோர் ஆட்சியாளரின் பதவி, சிறப்புரிமை மற்றும் கௌரவம் தொடர்பான விவகாரங்களில் ஆட்சியாளர்கள் மன்றத்துக்கு முக்கியப் பங்கு இருப்பதாகக் கூறினர்.
துவாங்கு முஹ்ரிஸை ஆட்சியாளர் பதவியிலிருந்து நீக்கி, புதிய ஆட்சியாளரை நியமிக்க மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் நடவடிக்கைகள் மாநில அரசியலமைப்புக்கும் சட்ட விதிகளுக்கும் உட்பட்டதா என்பதை ஆட்சியாளர்கள் மன்றம் ஆராய வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக் கொண்டனர்.
செப்டம்பர் 17ஆம் தேதி, துவாங்கு முஹ்ரிஸை நீக்கும் பிரகடனம் செல்லாது என்றும், மந்திரி பெசார் மற்றும் மாநில ஆட்சிக்குழுவினருக்கு தனிப்பட்ட முறையில் ஆட்சியாளரை நீக்கும் அதிகாரம் இல்லை என்றும் சட்டத்துறைத் தலைமை அலுவலகம் தெரிவித்திருந்தது.








