நெகிரி செம்பிலான் ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸை பதவி நீக்க முயன்ற மாநில மந்திரி பெசார் டத்தோ இஸ்மாயில் லாசிம் மற்றும் மாநில ஆட்சிக்குழுவினரின் நடவடிக்கைக்கு பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளரின் பதவியை கேள்விக்குள்ளாக்கவோ மாற்றவோ மாநில நிர்வாகத்துக்கு அதிகாரம் இல்லை என்றும், இந்த நடவடிக்கை மரியாதையற்றது மட்டுமின்றி நாகரிகமற்றது என்றும் அன்வார் சாடினார்.
ஷாங்காயிலிருந்து ஹாங்சோவுக்குச் செல்லும் அதிவேக ரயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், ஆட்சியாளரைப் பதவி நீக்குவது தொடர்பான முடிவு விதிமுறைகளுக்கு உட்பட்டே எடுக்கப்பட வேண்டும் என்றார்.
நெகிரி செம்பிலான் விவகாரத்தில் மத்திய அரசு தலையிடவில்லை என்றும், நாட்டின் பாதுகாப்பு மற்றும் அரசியலமைப்பு பரிபாலனங்களைப் பாதுகாப்பது மத்திய அரசின் பொறுப்பு என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, உண்டாங்களுக்கு ஆட்சியாளரை நீக்கும் அதிகாரம் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அவர்களின் முடிவும் முழுமையானது அல்ல; உரிய சட்ட நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும் அன்வார் வலியுறுத்தினார்.








