மலாக்கா மாநிலத் தேர்தலை முன்னிட்டு, பெர்சத்து உட்பட எந்தக் கட்சியுடனும் பேச்சுவார்த்தை நடத்த பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாக அதன் தலைவர் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.
அரசியலில் ஆணவத்தையும், பேச்சுவார்த்தைக்கு மறுப்பதையும் தவிர்க்க வேண்டும் என்று கூறிய அவர், பேச்சுக்கு யாராவது முன்வந்தால், அவர்களுடன் பேச்சு நடத்த வேண்டும் என்றார்.
பக்காத்தான் ஹராப்பான் சார்பில் பேச்சுவார்த்தைகளைத் தொடருமாறு சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரிக்கு தாம் பணித்துள்ளதாகவும் அன்வார் தெரிவித்தார்.
பெர்சத்து அல்லது பாரிசான் நேஷனல் உள்ளிட்ட எந்தக் கட்சியுடனும் அரசியல் ஒத்துழைப்பு குறித்து இதுவரை இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஷாங்காயிலிருந்து நகருக்குச் சென்ற அதிவேக ரயிலில் செய்தியாளர்களிடம் பேசிய அன்வார், தமது அரசாங்கத்தின் எஞ்சிய 15 மாத காலத்தில் நாட்டுக்குச் சேவையாற்றுவதில் தொடர்ந்து கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்தார்.








