கோத்தா கினபாலு, நவம்பர்.11-
இம்மாதம் இறுதியில் நடைபெறவிருக்கும் சபா மாநில சட்டமன்றத் தேர்தல், தற்போது சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. அனைவரின் பார்வையும் தற்போது சபா ஆளும் கட்சியான GRS எனப்படும் Gabungan Rakyat Sabah கூட்டணி மீது உள்ளது.
சபா மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு, இம்மாதம் 29 ஆம் தேதி நடைபெறும் வேளையில் இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 15 ஆம் தேதி சனிக்கிழமை நடைபெறுகிறது.
பரபரப்பான கட்டத்தில் இருக்கும் சபா தேர்தலில் பாரிசன் நேஷனல், PKR, DAP மற்றும் SAAP எனப்படும் Parti Maju Sabah ஆகிய கட்சிகள் தங்களது வேட்பாளரை அறிவித்த நிலையில், தற்போது அனைவரது பார்வையும் சபா ஆளும் கட்சியான GRS மீது உள்ளது. அக்கூட்டணி நாளை புதன்கிழமை தனது வேட்பாளர்கள் பட்டியலை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியில், ஒற்றுமை அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கூட்டணிக் கட்சிகள், சபா மாநில தேர்தலில் ஒன்றையொன்று எதிர்த்துப் போட்டியிடும் சூழ்நிலை உருவாகலாம் என்று கணிக்கப்படுகிறது.
பல அரசியல் சமரசங்களுக்குப் பிறகு தனது சொந்த அடையாளத்தை வலுப்படுத்திக் கொள்ளும் முயற்சியாக தராசு சின்னத்தில் போட்டியிடும் பாரிசான் நேஷனல் தனது 41 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது.
PKR கட்சி, மிக கவனமான அணுகுமுறையுடன் 10 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
சபா ஜசெக., 7 வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்துள்ளது. Likas, Kapayan மற்றும் Elopura முதலிய நகர்ப்புற தொகுதிகளை இலக்காகக் கொண்டு அது போட்டியிடுகிறது. மேலும் சபா ஜசெக. இம்முறை புதிய முகங்களாக மூன்று பெண் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
இதனிடைய ஆறு வேட்பாளர்களை நிறுத்தியுள்ள SAPP கட்சி, அந்த 6 வேட்பாளர்களின் பாதி பேர் புதிய முகங்கள் ஆவர். தனது பாரம்பரியத் தொகுதிகளில் போட்டியிடுவதில் அக்கட்சி கவனம் செலுத்தியுள்ளது.
நாளை GRS அறிவிக்கும் வேட்பாளர்களை பொறுத்தே, மாநில தேர்தலில் அனல் பறக்கும் சூழலை முடிவு செய்ய முடியும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.








