நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து வரும் பாரிசான் நேஷனல் கூட்டணி, ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து விலகத் தயாரா? என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோணி லோக் சவால் விடுத்துள்ளார்.
இருப்பினும், அரசியல் செல்வாக்கை இழந்துவிடுவோம் என்ற அச்சத்தில் பாரிசான் கூட்டணி, அரசாங்கத்திலிருந்து விலகாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நேற்று இரவு ஆய்ர் கெரோவில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அந்தோணி லோக், புதிய அமைச்சரவை நியமனத்துக்குப் பதிலாக முன்கூட்டியே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற பாரிசான் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடியின் கோரிக்கைக்குப் பதிலடி கொடுத்துள்ளார்.
மேலும், அரசாங்கப் பதவிகளை இழந்தால் தங்களது அரசியல் செல்வாக்கும் குறைந்துவிடும் என்பதால், பாரிசான் தொடர்ந்து அரசாங்கத்தில் இருக்க விரும்புவதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதேவேளையில் அரசாங்கத்தை வழிநடத்துவதற்கான அதிகாரம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் வசமே இருப்பதாகவும், அவருக்குத் தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவு இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அரசாங்கத்தின் செயல்பாடுகள் பிடிக்கவில்லை என்றால், அரசாங்கத்திலிருந்து வெளியேறலாம் என்றும் அவர் பாரிசானை வலியுறுத்தியுள்ளார்.
மாறாக, நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறு பிரதமருக்கு தினசரி நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்றும் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.








