இளம் மலாய் சமூகத்தினரையும், குறிப்பாக ஜென் ஸி தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில், ‘கோபிலே ஹராப்பான்’ என்ற புதிய முயற்சி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பக்காத்தான் ஹராப்பான் தேர்தல் பிரிவான ஜேபிபிஎச் செயலகச் செயலாளர் சைஃபுடின் ஷாஃபி தொடங்கியுள்ள இந்தத் திட்டமானது, இளைஞர்களுக்கும் தலைவர்களுக்கும் இடையே நேரடியான கலந்துரையாடலை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
வழக்கமான அரசியல் உரைகளுக்குப் பதிலாக, காபி அருந்தியபடி எளிமையாகவும் வெளிப்படையாகவும் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
இதன் ஒரு பகுதியாக, மலாக்கா மாநிலம் முழுவதும் இளைஞர்கள் அதிகம் கூடும் இடங்களில் உள்ளூர் காபி விற்பனையாளர்களுடன் இணைந்து கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
இதன் மூலம் சிறு வணிகர்களுக்கும் உள்ளூர் காபி தொழில்துறைக்கும் ஆதரவு வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், வேலைவாய்ப்பு, வாழ்க்கைச் செலவு, கல்வி, பொருளாதாரம் மற்றும் இளைஞர்களின் எதிர்காலம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகள் குறித்து இளைஞர்களின் கருத்துகளைக் கேட்டறிவது இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
மேலும், நாட்டின் கொள்கைகள் மற்றும் வளர்ச்சி தொடர்பான விவாதங்களில் இளைஞர்களின் குரலுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டும் என இந்த முயற்சி வலியுறுத்துகிறது.








