மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில், பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது துணைவர்களுக்கான முன்கூட்டியே வாக்குப்பதிவானது இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிலையில், 95 விழுக்காட்டுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இன்று மாலை 5 மணியுடன் 31 முன்கூட்டியே வாக்குப்பதிவு மையங்களிலும் வாக்குப்பதிவுகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டன.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 12 ஆயிரத்து 531 பேர் முன்கூட்டியே வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டிருந்ததாகவும், அவர்களில் 9 ஆயிரத்து 769 பேர் ராணுவத்தினர் மற்றும் அவர்களது துணைவர்கள் என்றும், 2,762 பேர் போலீசார் மற்றும் அவர்களது துணைவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், அவர்களில் 9 ஆயிரத்து 917 பேர் நேரடியாக வாக்களிக்கத் தகுதி பெற்றிருந்த நிலையில், 2,614 பேர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.
மேலும், நேரடியாக வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களில், 9,417 பேர், அதாவது 94.96 விழுக்காட்டினர் வாக்களித்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுவாக்குப்பதிவில், மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 697 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.








