மலாக்கா மாநிலத்தின் காடேக் பகுதியில் நவீன விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியின் காடேக் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் 45 வயதான கே. ஜெகசீலன் தெரிவித்துள்ளார்.
காடேக் பகுதியில் நவீன காய்கறி சாகுபடி மற்றும் கால்நடை வளர்ப்புக்கு ஏற்ற வகையில் அதிகளவிலான நிலங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முன்னர் ரப்பர் தோட்டங்களாக இருந்த நிலங்களை விவசாயப் பகுதிகளாக மாற்றி, உள்ளூர் சந்தைகளுக்குத் தேவையான பல்வேறு பயிர்களை உற்பத்தி செய்ய முடியும் என்றும், கோழி மற்றும் மாட்டுப் பண்ணைகளை உருவாக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கே.ஜெகசீலன் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் உள்ளூர் இளைஞர்களுக்குத் தேவையான பயிற்சிகளையும் வழிகாட்டுதல்களையும் வழங்கினால், அவர்களே இந்தத் திட்டங்களை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
மேலும், உள்ளூரிலேயே வேலைவாய்ப்புகளை உருவாக்குவதன் மூலம் இளைஞர்கள் வேலை தேடி குறிப்பாக, சிங்கப்பூர் செல்வதைக் குறைக்க முடியும் என்றும் கே. ஜெகசீலன் விவரித்துள்ளார்.
இதனிடையே, வரும் நவம்பர் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள மலாக்கா மாநிலத் தேர்தலில், காடேக் சட்டமன்றத் தொகுதியில் ஜெகசீலனை எதிர்த்து பாரிசான் நேஷனல் கூட்டணியின் எஸ். நடராஜா, பெர்சாமா கட்சியின் லவீன் பாலபிரபாகரன் மற்றும் புத்ரா கட்சியின் லைலா நோரிண்டா மாவொன் ஆகியோர் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.








