பெங்காலான் பத்து மக்களின் குரலாகச் சட்டமன்றத்தில் ஒலிக்க உறுதி!
மலாக்கா மாநிலத் தேர்தலில் பெங்காலான் பத்து சட்டமன்றத் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் சார்பில் போட்டியிடும் ஜேசன் ட்ஸே-ஸி நாதன், தனிப்பட்ட தொழில் வளர்ச்சியைவிட மக்கள் சேவைக்கே முன்னுரிமை அளித்து தேர்தல் களத்தில் இறங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
ஜசெக இளைஞர் பிரிவான டப்சியின் (DAPSY) தேசிய செயற்குழு உறுப்பினரான அவர், பல்கலைக்கழகக் காலத்தில் நாட்டை உலுக்கிய 1எம்டிபி ஊழல் விவகாரம், ஊழலற்ற நிர்வாகம் மற்றும் அரசியல் சீர்திருத்தத்தின் அவசியத்தைத் தமக்கு உணர்த்தியதாகக் குறிப்பிட்டார். இதுவே சட்டத்துறையில் உயர் கல்வி பயிலவும், அரசியல் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடவும் தூண்டுதலாக அமைந்ததாக ஜேசன் ட்ஸே-ஸி நாதன் கூறினார்.
மலாக்காவில் பிறந்து வளர்ந்த தமக்கு இம்மாநிலத்தின் மீது ஆழமான பற்றுதல் இருப்பதாகக் குறிப்பிட்ட ஜேசன், தமது குழுவினருடன் இணைந்து பெங்காலான் பத்து தொகுதி மக்களைத் தொடர்ந்து சந்தித்து, அவர்களின் குறைகளையும் அன்றாடப் பிரச்சினைகளையும் கேட்டறிந்து வருவதாகத் தெரிவித்தார்.
தொடர்ந்து வழக்கறிஞராகப் பணியாற்றியிருந்தால் சிறந்த வருமானத்தையும் தொழில் முன்னேற்றத்தையும் பெற்றிருக்க முடியும் என்றாலும், பொதுச் சேவைக்காக அந்த வாய்ப்புகளைப் பின்னுக்குத் தள்ளியதாக அவர் கூறினார்.
மக்களின் குரலை மாநிலச் சட்டமன்றத்தில் ஒலிக்கச் செய்வதுடன், அரசாங்கத்தின் செயல்பாடுகளைக் கண்காணித்து, அடித்தட்டு மக்களின் நலனுக்கான சீர்திருத்தங்களை முன்னெடுப்பதே தமது முக்கிய நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
பெங்காலான் பத்து மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, மலாக்காவின் எதிர்கால வளர்ச்சிக்கும் பல்லின மக்களின் ஒற்றுமைக்கும் தொடர்ந்து பாடுபட விரும்புவதாக ஜேசன் ட்ஸே-ஸி நாதன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.








