மலாக்கா மாநிலத்தின் 16ஆவது சட்டமன்றத் தேர்தலில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து, ஆறு பெண் வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ளது பக்காத்தான் ஹராப்பான்.
மலாக்காவில் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 697 பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களில், 3 லட்சத்து 48 ஆயிரத்து 849 பேர் பெண்கள். இது மொத்த வாக்காளர்களில் 50.73 விழுக்காடாகும். ஆண்களைவிடப் பெண்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதால், தேர்தல் வெற்றியைத் தீர்மானிப்பதில் அவர்களின் வாக்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.
இந்தச் சூழலில், பக்காத்தான் ஹராப்பான் சார்பில் தாபோ நானிங்கில் ஜுனைனா சஹாட், மச்சாப் ஜெயாவில் டத்தோ ஜினி லிம் சியூ லின், கெலேபாங்கில் ஃபார்ஹானா ஹயானி முஹமட் நசீர், பண்டார் ஹிலிரில் லெங் சாவ் யென், ரிம் தொகுதியில் எஸ்மா எஸ்ரின் ஹுசேன், மெர்லிமாவில் ரஹாயு ஹம்ஸா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 24 வேட்பாளர்களைக் களமிறக்கியுள்ள பக்காத்தான் ஹராப்பானில், பெண்களின் பிரதிநிதித்துவம் 25 விழுக்காடாக உள்ளது. இதற்கிடையே, பாரிசான் நேஷனல் நான்கு பெண் வேட்பாளர்களையும், பெர்சாமா மலேசியா இரண்டு வேட்பாளர்களையும், பெர்சாத்து மற்றும் புத்ரா தலா ஒரு பெண் வேட்பாளரையும் களமிறக்கியுள்ளன. ஆனால், பெரிக்காத்தான் நேஷனல் பெண் வேட்பாளர் எவரையும் நிறுத்தவில்லை.
மற்றொரு முக்கிய அம்சமாக, பக்காத்தான் ஹராப்பான் பெண் வேட்பாளர்களின் சராசரி வயது 40.2 ஆக இருப்பது, இளம் தலைமுறைப் பெண்களுக்கும் அரசியல் தலைமைத்துவ வாய்ப்புகளை வழங்கியிருப்பதைக் காட்டுகிறது.
பெண்களின் அரசியல் பங்கேற்பு என்பது தேர்தலில் போட்டியிடுவதுடன் முடிந்துவிடக்கூடாது. அவர்கள் வெற்றி பெற்றால், பெண்களின் பாதுகாப்பு, வேலைவாய்ப்பு, கல்வி, குடும்ப நலன், பொருளாதார முன்னேற்றம் உள்ளிட்ட முக்கியப் பிரச்சினைகளுக்குச் சட்டமன்றத்தில் குரல் கொடுக்க வேண்டும்.
மொத்தத்தில், மலாக்கா தேர்தலில் பெண்களின் வாக்குப் பலம் ஒருபுறமும், அரசியல் பிரதிநிதித்துவம் மறுபுறமும் முக்கியத்துவம் பெறுகின்றன. பெண்கள் வாக்காளர்களாக மட்டுமின்றி, தலைமைத்துவப் பொறுப்புகளையும் ஏற்று மாநிலத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக உருவெடுக்க வேண்டும் என்பதே இந்தத் தேர்தல் உணர்த்தும் முக்கியச் செய்தியாகும்.








