கோலாலம்பூர், ஜனவரி.18-
மலாய் - இஸ்லாமிய அடிப்படையிலான அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒரு பெரும் கூட்டணியை உருவாக்கும் தனது திட்டம் குறித்து, அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமிடம் ஏற்கனவே தெரிவித்து விட்டதாக டத்தோ ஃபாமி ஃபாட்சீல் கூறினார். நாட்டின் அரசியல் நிலைத்தன்மையையும் ஒற்றுமையையும் பலப்படுத்தும் நோக்கில் முன்வைக்கப்பட்டுள்ள இந்த யோசனை குறித்து, அரசாங்கத்தின் உயர்மட்டத் தலைவர்கள் போதுமான புரிதலைக் கொண்டுள்ளதாக அவர் மேலும் விளக்கினார்.
இத்திட்டம் தொடர்பாக பி.கே.ஆர் கட்சிக்கு இதுவரை அதிகாரப்பூர்வ அழைப்பு ஏதும் வந்துள்ளதா என்பது குறித்து அக்கட்சியின் பொதுச் செயலாளரிடம் இன்னும் சரி பார்க்கவில்லை என்று அக்கட்சியின் தகவல் தொடர்பு பிரிவு தலைவரும், தகவல் தொடர்பு அமைச்சருமான ஃபாமி குறிப்பிட்டார். அம்னோ பொதுப்பேரவையில் ஸாஹிட் ஹமிடியால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனை, தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்தின் முக்கிய அங்கமான பி.கே.ஆர் உட்பட பிற கட்சிகளிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.








