நெகிரி செம்பிலான் மாநிலத்தில் கடந்த எட்டு ஆண்டுகளில் பக்காத்தான் ஹராப்பான் அரசு செய்த மக்கள் நலத்திட்டங்கள் தடையின்றித் தொடர, மத்திய அரசுடன் இணக்கமாகச் செயல்படும் தற்போதைய மாநில ஆட்சியே மீண்டும் அமைய வேண்டும் என்று பக்காத்தான் ஹராப்பானின் நீலாய் தொகுதி வேட்பாளர் ஜே. அருள்குமார் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த எட்டு ஆண்டுகால பக்காத்தான் ஹராப்பான் ஆட்சியில் தமிழ்ப்பள்ளிகள், ஆலயங்கள் மேம்பாடு, ஏழை மக்களுக்கான நிதி உதவிகள் மற்றும் சிறு வியாபாரிகளுக்கான நலத்திட்டங்கள் எனப் பல ஆக்கப்பூர்வமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் சுமார் மூன்று ஆண்டுகள் நாட்டில் நிலவிய அரசியல் நிலைத்தன்மையற்ற தன்மையால், மக்கள் நலத்திட்டங்கள் முடங்கியதைச் சுட்டிக்காட்டிய அவர், தேர்தல் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வந்தாலும் அரசியல் நிலைத்தன்மை மிக முக்கியம் எனக் குறிப்பிட்டார்.
மத்திய அரசாங்கத்துடன் ஒரே நேர்கோட்டில் பயணிக்கும் பக்காத்தான் ஹராப்பான் தலைமையிலான மாநில அரசு அமைந்தால் மட்டுமே, திட்டங்களைச் செம்மையாகவும் விரைவாகவும் அமல்படுத்த முடியும் என்று அருள்குமார் விவரித்தார்.
மக்களின் நல்வாழ்வையும் மாநிலத்தின் தொடர் வளர்ச்சியையும் உறுதிப்படுத்த, நெகிரி செம்பிலான் மாநில பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தை பொதுமக்கள் மீண்டும் நிலைநிறுத்த வேண்டும் என்று மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான ஜே. அருள்குமார் தனது பேட்டியில் கேட்டுக்கொண்டார்.









