கங்கார், டிசம்பர்.29-
பெர்லிஸ் மாநிலத்தில் நிலவி வரும் அரசியல் குழப்பங்களுக்கும், நெருக்கடிகளுக்கும் முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக பெர்லிஸ் ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில், அனைத்துத் தரப்பினரையும் இணைந்து செயல்படுமாறு வலியுறுத்தியுள்ளார்.
கோல பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினர் அபு பாக்கார் ஹம்ஸா, நேற்று மாநிலத்தின் புதிய மந்திரி பெசாராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அனைத்து ஊகங்களும் குற்றச்சாட்டுகளும் முடிவுக்கு வர வேண்டும் என ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் உத்தரவிட்டுள்ளார்.
பொதுவாக மந்திரி பெசார் நியமனம் என்பது, ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ வேண்டும் என்று குறிப்பிட்ட பெர்லிஸ் ராஜா, முன்னாள் மந்திரி பெசார் முஹமட் ஷுக்ரி உடல்நிலை சரியில்லாத காரணங்களுக்காக ராஜினாமா செய்ததால், இந்தப் புதிய நியமனம் அவசியமாகியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
எனவே, குழப்பங்களைத் தவிர்த்து, பெரிகாத்தான் நேஷனல் கூட்டணியானது, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் ஒன்றிணைத்து, மாநிலத்திற்கும், மக்களின் நலனுக்காகவும் இணைந்து செயல்படுமாறு பெர்லிஸ் ராஜா வலியுறுத்தியுள்ளார்.
அதே வேளையில், புதிய மந்திரி பெசார் அபு பாக்கார் ஹம்ஸாவின் நியமனமானது, பெர்லிஸ் மாநிலத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து மக்கள் பிரதிநிதிகளின் கருத்துகளைக் கவனமாகப் பரிசீலித்த பிறகே எடுக்கப்பட்டதாகவும் பெர்லிஸ் ராஜா துவாங்கு சையிட் சிராஜுடின் ஜமாலுலாயில் தெரிவித்துள்ளார்.








