புத்ராஜெயா, ஜனவரி.29-
மலேசியப் பிரதமர் பதவிக் காலத்திற்கு வரம்பு விதிக்கும் திட்டத்திற்குப் பொதுமக்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்துள்ளதாகச் சட்ட விவகாரப் பிரிவு நடத்திய பொதுக் கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
ஒரு வார காலம் நடத்தப்பட்ட இந்தக் கருத்துக் கணிப்பில் மொத்தம் 3,722 பேர் பங்கேற்றதாக BHEUU-வின் துணை இயக்குநர் டத்தோ எஸ். புனிதா தெரிவித்தார்.
பங்கேற்றவர்களில் 89.90 விழுக்காட்டினர் பிரதமர் பதவிக்குக் கால வரம்பு விதிக்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளனர். 8.27 விழுக்காட்டினர் எதிர்த்துள்ளனர், 1.75 விழுக்காட்டினர் உறுதியற்ற நிலையில் உள்ளனர்.
மேலும் 62.25 விழுக்காட்டினர் இரண்டு தவணை பதவிக் காலம் என்ற வரம்பையும், 20.61 விழுக்காட்டினர் அதிகபட்சம் 10 ஆண்டுகள் என்ற வரம்பையும் ஆதரித்துள்ளனர்.
இந்த வரம்பை முன்மொழியப்பட்ட சட்டத்திற்கு முன்னதாகப் பணியாற்றிய காலத்தையும் கணக்கில் கொண்டு அமல்படுத்த 58.97 விழுக்காட்டினர் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்று டத்தோ எஸ். புனிதா தெரிவித்தார்.








