கோலாலம்பூர், ஜனவரி.27-
டான் ஶ்ரீ முகைதீன் யாசின் தலைமையில் பெரிகாத்தான் நேஷனல் தலைமைத்துவ மன்றத்தை உருவாக்கும் ஒரு முன்மொழிவு பரிசீலனையில் உள்ளதை பாஸ் கட்சி உறுதிப்படுத்தியுள்ளது.
என்றாலும் இம்முடிவானது, எதிர்வரும் பெரிக்காத்தான் நேஷனல் உச்சமன்றக் கூட்டத்தில், கூட்டணிக் கட்சித் தலைவர்களால் கூட்டாக எடுக்கப்பட வேண்டிய ஒன்று என பாஸ் கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோ ஶ்ரீ தக்கியுடின் ஹசான் தெரிவித்துள்ளார்.
முகைதீன் யாசின் தலைமையிலான தலைமைத்துவ மன்றம் அமைப்பது குறித்த முன்மொழிவு ஒன்று பரிசீலனையில் இருப்பதை ஒப்புக் கொண்ட தக்கியுடின், பாஸ் அத்தகைய ஏற்பாட்டை ஏற்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
என்றாலும், இந்த விவகாரத்தில் எந்தவொரு தனிப்பட்ட கட்சியின் தலையீடும் இன்றி, தலைமைத்துவ மன்றத்தின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என்றும் அவர் வலியுறுத்தினார்.
இதனிடையே, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவரை நியமிப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு டான் ஶ்ரீ முகைதீன் யாசின் அழைக்கப்படவில்லை என்பதால், அவர் உச்சமன்றத்தின் உறுப்பினராகவும் இல்லை என்றும் முந்தைய தகவல்கள் தெரிவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.








