கோலாலம்பூர், ஜனவரி.28-
பினாங்கு மாநிலம் வரலாற்று ரீதியாக கெடா மாநிலத்திற்குச் சொந்தமானது என்றும், அதனை மீண்டும் கோருவதற்கு கெடா மந்திரி புசார் முகமட் சனுசி முகமட் நோர் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கெடா மக்கள் முழு ஆதரவை வழங்குகிறார்கள் என்றும் லங்காவி நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சுஹைமி அப்துல்லா தெரிவித்துள்ளார்.
பினாங்கு முதலமைச்சர் சாவ் கோன் இயாவ், இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் சந்திக்கத் தயார் என்று கூறியிருப்பதைச் சுட்டிக் காட்டிய சுஹைமி, "நாங்களும் நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராகவே இருக்கிறோம்" என்று சவால் விடுத்துள்ளார்.
1786-ஆம் ஆண்டில் பிரான்சிஸ் லைட் என்பவரால் பினாங்கு சட்டவிரோதமாகக் கைப்பற்றப்பட்டது என்றும், அது காலங்காலமாக கெடா சுல்தானுக்குச் சொந்தமான நிலம் என்றும் கெடா தரப்பு வாதிடுகிறது. இதற்காக ஒரு வரலாற்று ஆய்வுத் குழுவை அமைத்து, 20,000-க்கும் மேற்பட்ட ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக மந்திரி புசார் சனூசி ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
எனினும் இவ்விவகாரத்தில் மந்திரி பெசார் சனூசி எடுக்கக்கூடிய எந்தவொரு முயற்சிக்கும் கெடா மக்கள் ஆதரவாக இருப்பார்கள் என்று டத்தோ சுஹைமி அப்துல்லா தெரிவித்தார்.








