கோலாலம்பூர், ஜனவரி.26-
பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் புதிய தலைவரை நியமிப்பதற்காக இந்த வாரம் நடைபெற்ற உச்சமன்றக் கூட்டத்திற்கு, பெர்சத்து கட்சித் தலைவர் டான் ஶ்ரீ முகைதீன் யாசின் அழைக்கப்படவில்லை. அவர் இப்போது அந்த உச்சமன்றத்தின் உறுப்பினராக இல்லாததே இதற்குக் காரணம் என கூட்டணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் பெரிக்காத்தான் நேஷனல் தலைவர் பதவியிலிருந்து முகிதீன் யாசின் விலகினார். அந்தத் தருணத்திலிருந்தே அவர் உச்சமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டணியின் விதிமுறைப்படி, ஒரு கட்சியின் தலைவர் என்பதாலேயே அவர் தானாகவே உச்சமன்ற உறுப்பினராகிவிட முடியாது. முகைதீன் யாசின் தனது தலைவர் பதவியை ராஜினாமா செய்ததை உச்சமன்றம் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டியது இனி ஒரு நடைமுறைச் சடங்கு மட்டுமே என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.








