Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை
அரசியல்

சுற்றுலா விசாவைத் தவறாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் மீது கடும் நடவடிக்கை - குடிநுழைவுத் துறை எச்சரிக்கை

Share:

சமூக வருகை அனுமதி எனப்படும் சுற்றுலா விசாவைக் கொண்டு சுற்றுலாப் பயணிகளாக நாட்டுக்குள் நுழைந்து, பின்னர் உணவகங்கள் அல்லது தொழிற்சாலைகளில் வேலை செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் சில வெளிநாட்டவர்களின் நடவடிக்கையை மலேசியக் குடிநுழைவுத் துறை தீவிரமாகக் கவனித்து வருகிறது.

கடந்த ஜனவரி 1 முதல் மார்ச் 9 -ஆம் தேதி வரை, நாடு முழுவதும் நடத்தப்பட்ட 2 ஆயிரத்து 618 சோதனை நடவடிக்கைகளில், மொத்தம் 9 ஆயிரத்து 497 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களில் 1,158 பேர், குடிநுழைவு விதிமுறைகள் 1963-ன் விதி 39(b) கீழ், வழங்கப்பட்ட விசா நிபந்தனைகளை மீறியதாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அவர்களில் பெரும்பாலானோர், தற்காலிக வேலை அனுமதி மற்றும் சுற்றுலா விசா போன்றவற்றை தவறாக பயன்படுத்தியது கண்டறியப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்களில் தாய்லாந்து, இந்தோனேசியா, வங்காள தேசம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அடங்கியுள்ளதாக குடிநுழைவுத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், அவர்களில் சிலர் சட்டபூர்வ அனுமதி இன்றி வணிக வளாகங்களை நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் போன்ற செயல்களில் நேரடியாக ஈடுபட்டிருந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், குடிநுழைவுச் சட்டங்களை மீறும் வெளிநாட்டவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் குடிநுழைவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Related News