கோலாலம்பூர், நவ.9-
பிகேஆர் கட்சியில் தலைவர் பதவியை வகிக்கின்றவர்கள் மூன்று தவணைக் காலம் மட்டுமே அப்பொறுப்பில் இருக்க முடியும் என்று காலவரம்பு நிர்ணயிக்கப்பட்ட போதிலும், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 16 ஆவது பொதுத் தேர்தலிலும் அவர் பிரதமர் பொறுப்பை வகிப்பதற்கு அக்கால வரம்பு, அனுமதிக்கிறது என்று அக்கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் ஃபாஹிமி பாட்ஸில் தெரிவித்தார்.
காரணம், பிகேஆர் கட்சித் தலைவர் என்ற முறையில் டத்தோஸ்ரீ அன்வார், அந்த மூன்று தவணைக்கான கால வரம்பை நிறைவு செய்வதற்கு இன்னும் அதிக காலம் இருப்பதாக ஃபாஹிமி பாட்ஸில் விளக்கினார்.
டத்தேஸ்ரீ அன்வார், இரண்டாவது முறையும் பிரதமர் பதவியை வகிப்பதற்கு, கட்சியின் தேசியத் தலைவர் என்ற முறையில் கட்சியில் அவருக்கான தவணைக்காலம் அனுமதிக்காது என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஃபாஹிமி பாட்ஸில் தெளிவுபடுத்தினார்.








