கோலாலம்பூர், டிச.13-
வங்காளதேசத்தில் இந்துக்கள் உட்பட எந்தவொரு நாட்டிலும் சிறுபான்மையினருக்கு எதிராக நிகழ்த்தப்படும் உயிர்பலி சம்பவங்கள், கட்டவிழ்க்கப்படும் கொடுமைகள் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக மலேசியா தொடர்ந்து குரல் கொடுக்கும், கண்டிக்கும் என்று நாடாளுமன்ற மேலவையில் வெளியுறவுத்துறை துணை அமைச்சர் டத்தோ முகமட் அலாமின் தெரிவித்தார்.
வங்காளதேசத்தில் சிறுபான்மையினரான இந்துக்களுக்கு எதிராக கட்டவிழ்க்கப்பட்டுள்ள அராஜக செயலை மலேசியா கண்டிக்க வேண்டும் என்று மேலவையில் செனட்டர் டாக்டர் ஆர்.ஏ. லிங்கேஸ்வரன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்கையில் டத்தோ முகமட் அலாமின் மேற்கண்டவாறு கூறினார்.
எந்தவொரு சிறுபான்மையினருக்கு எதிராக மேற்கொள்ளப்படும் வன்முறைகள் தொடர்பில் அவர்களின் எல்லைகள், இனம், சமயம் என எந்தவொரு பின்புலத்தையும் பாராமல் கண்டனக்குரல் எழுப்ப வேண்டும் என்பதை மலேசியா ஒது கொள்கையாக கொண்டு இருப்பதை முகமட் அலாமின் சுட்டிக்காட்டினார்.
தவிர எந்த நாடாக இருந்தாலும், அங்கே சிறுபான்மையினரின் உரிமைகள் பாதுகாப்பது உட்பட அவர்களின் அடிப்படை உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவதை மலேசியா ஒரு கடப்பாடாக கொண்டுள்ளது. அந்த வகையில் வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நிகழும் வன்முறையையும் மலேசியா கண்டிக்கிறது.
இதேபோன்று பாலஸ்தீனர்கள் விவகாரம் உட்பட தென்னாப்பிரிக்காவில் நிகழும் இனவெறி கொள்கையை கண்டிப்பதிலும் , குரல் எழுப்புவதிலும் மலேசியா தொடர்ந்து உறுதிப்பூண்டு இருப்பதாக டாக்டர் லிங்கேஸ்வரனின் கேள்விக்கு பதில் அளிக்கையில் துணை அமைச்சர் முகமட் அலாமின் இவ்வாறு தெரிவித்தார்.