கோலாலம்பூர், நவம்பர்.23-
ஜி20 உச்சநிலை மாநாட்டிற்காக தென் ஆப்பிரிக்காவின் Johannesburgக்கில் இருந்த பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் சுருக்கமான சந்திப்பை நடத்தினார். இரு நாடுகளுக்கும் இடையேயான பொருளாதார, வணிகம், கல்வி, புதிய தொழில்நுட்பத் துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்த தலைவர்கள் தங்கள் உறுதிப்பாட்டை வலியுறுத்தினர்.
இதன் காரணமாக, இரு நாட்டு மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் பல்வகைப்பட்ட முதன்மை ஒத்துழைப்பை தொடர மலேசியா, இந்தியா தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படும். இந்தச் சந்திப்பு இரு தரப்பு நம்பிக்கையும் மரியாதையின் அடிப்படையிலும் அமைந்ததாகவும், இதன் மூலம் வட்டாரப் புதிய வளர்ச்சிக் களமாக மாறும் ஆற்றலை அதிகரிக்க முடியும் என்றும் அன்வார் தெரிவித்தார். இந்தப் பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளின் உறவு உறுதியாகவும் நிலையாகவும் நீடிக்கச் செய்யும் என்று பிரதமர் அன்வார் நம்பிக்கை வெளியிட்டார்.








