கோலாலம்பூர், பிப்ரவரி.20-
அம்னோ தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹமிடி, நாட்டின் அடுத்த பிரதமராவதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது என்று அம்னோவின் முன்னாள் இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
தனது 'Keluar Sekejap” எனும் அலைவரிசையின் அண்மைய நிகழ்வில் பேசிய முன்னாள் சுகாதார அமைச்சரான கைரி, மற்ற அரசியல் கட்சிகளுக்குள் நீடித்து வரும் உள்முரண்பாடுகளே ஸாஹிட் ஹமிடியின் வாய்ப்பு அதிகரிப்பதற்குக் காரணம் என்று கூறினார்.
ஸாஹிட் பிரதமர் ஆவதற்கான வாய்ப்பு 'சாத்தியமே இல்லை' என்ற நிலையிலிருந்து இப்போது 'ஓரளவுக்குப் பெரியது' என்ற நிலைக்கு மாறியுள்ளது. ஒரு வேளை அவர் இன்னும் முதல் நிலை தேர்வாக இல்லாவிட்டாலும், பிரதமராகுவதற்கான வாய்ப்பு இன்னமும் பிரகாசமாக இருப்பதாக கைரி கூறினார்.
மற்ற கட்சிகளுடன் ஒப்பிடும் போது, அம்னோ தற்போது உட்பூசல்கள் இன்றி அதிக நிலைத்தன்மையுடன் காணப்படுவதாகவும், கட்சியின் ஒற்றுமையைப் பாதிக்காமல் கருத்து வேறுபாடுகளைக் கையாளும் திறன் அம்னோவிடம் இருப்பதாகவும் கைரி குறிப்பிட்டார்.
மேலும், சுமார் 20 முதல் 30 நாடாளுமன்ற இடங்களைக் கொண்டுள்ள அம்னோ, அடுத்த பொதுத் தேர்தலுக்குப் பிறகு பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள முடியுமா என்பதைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக விளங்கும் என்றும் அவர் கூறினார்.
"எந்தவொரு கூட்டணியிலும், பிரதமர் அன்வார் ஆட்சியில் நீடிப்பாரா இல்லையா என்பதைத் தீர்மானிக்கும் திறவுகோலை அம்னோவே வைத்திருக்கும்," என்று கைரி மேலும் தெரிவித்தார்.








