Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சூரிய மின் சக்தி திட்ட ஊழல் வழக்கு/ ரோஸ்மா மன்சூரின் மேல்முறையீடு ஜூலை 1 முதல் விசாரணை
அரசியல்

சூரிய மின் சக்தி திட்ட ஊழல் வழக்கு/ ரோஸ்மா மன்சூரின் மேல்முறையீடு ஜூலை 1 முதல் விசாரணை

Share:

1.25 பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சூரிய மின்சக்தி திட்ட ஊழல் வழக்கில், கடந்த 2022-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தண்டனை மற்றும் குற்றச்சாட்டை ரத்து செய்யும் நோக்கில், ரோஸ்மா மான்சோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரிக்க அப்பீல் நீதிமன்றம், வரும் ஜூலை 1-ஆம் தேதி முதல் மூன்று நாட்களை ஒதுக்கியுள்ளது.

இன்று திங்கட்கிழமை நீதிபதி நட்ஸரின் வோக் நோர்டின் முன்னிலையில் நடைபெற்ற இவ்வழக்கு மேலாண்மை அமர்வில், இந்த தேதிகள் நிர்ணயிக்கப்பட்டதாக ரோஸ்மாவின் வழக்கறிஞர் அக்பர்தீன் அப்துல் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், துணை அரசு தரப்பு வழக்கறிஞர் பி. சாருலதாவும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

இதனிடையே, இவ்வழக்கில் ரோஸ்மாவை விசாரித்து தண்டனை வழங்கிய நீதிபதியை, வழக்கிலிருந்து விலக்க மறுத்த பெடரல் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யவும் மனு தாக்கல் செய்துள்ளதாக ரோஸ்மாவின் வழக்கறிஞர்களான அக்பர்தீன் மற்றும் ஜக்ஜித் சிங் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இந்த மனுவானது Federal நீதிமன்ற சட்டம் 1995, பிரிவு 137 -இன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அக்பர்தீன் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த வழக்கின் முக்கிய குற்றச்சாட்டு என்னவென்றால், இரண்டு தீர்ப்புகள் இருந்த நிலையில், விசாரணை நீதிபதிக்கு சார்புநிலை ஏற்படும் அபாயம் ஏற்பட்டதாக பெடரல் நீதிமன்றம் கருதியது தவறானது என்று அம்மனுவில் குறிப்பிட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், மறுஆய்வு விசாரணைக்கான தேதியை நிர்ணயிப்பதற்காக, வரும் ஏப்ரல் 3-ஆம் தேதி வழக்கு மேலாண்மை நடைபெறும் என்று அவர் கூறியுள்ளார்.

Related News