கோலாலம்பூர், நவ.9-
அரசாங்கத்தின் குத்தகைகளை பெற்றுத் தருவதற்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள், லட்சக்கணக்கான பணத்தை லஞ்சமாக கேட்டனர் என்பதற்கு ஆதாரமாக தங்களிடம் வீடியோ இருப்பதாக கூறும் தரப்பினர், அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்குமாறு அரசாங்கப் பேச்சாளர் ஃபாஹ்மி ஃபாட்ஸில் கேட்டுக்கொண்டார்.
தகவல் வழங்குபவர்கள் அல்லது ஆதாரங்களை சமர்ப்பிக்கின்றர்களுக்கு நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு ஏற்ப உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சரான ஃபாஹ்மி தெளிவுபடுத்தினார்.
சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய ஆதாரங்களை வழங்கினால் அவர்கள் 2010 ஆம் ஆண்டு தகவல் வழங்குபவர்கள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.
எனவே உரிய விசாரணை நடத்தப்படுவதற்கு சம்பந்தப்பட்டவர்கள், தங்களிடம் உள்ள ஆதாரங்களையும் புகாரையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று ஃபாஹ்மி அறிவுறுத்தினார்.
ஒரு மாநிலத்தின் குத்தகைத் திட்டங்களை பெற்றுத்தருவதற்கு சில சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சக் கணக்கான பணத்தை லஞ்சம் கேட்டு, பேரம் பேசியதாக கூறப்படும் எட்டு வீடியோக்களை தாங்கள் கொண்டுள்ளதாக ஒரு தரப்பினர், அறிவித்தது தொடர்பில் ஃபாஹ்மி கருத்துரைத்தார்.
தகவல் வழங்கியதற்காக தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அரசாங்கம் உத்தரவாதம் அளிக்குமானால் அந்த ஆதாரங்களை சமப்பிக்க தாங்கள் தயாராக இருப்பாக இன்று ஒரு தரப்பினர் அறிவித்துள்ளனர்.








