கோலாலம்பூர், நவ.11-
ஏ.ஐ. தேசிய செயற்கை நுண்ணறிவு புத்தாக்க
மையம், அடுத்த மாதம் தொடங்கப்படும் என்று இலக்கவியல்துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ அறிவித்துள்ளார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய சவால்கள் உள்பட அனைத்து
அம்சங்களையும் ஆராயும் நோக்கில் இந்த மையம் அமைக்கப்படவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் துரித வளர்ச்சியை குறிப்பாக இவ்வட்டார
நாடுகள் அணுக்கமாக கவனித்து வரும் தகவல் கசிவை, இந்த
முன்னெடுப்பு முயற்சியில் கவனத்தில் கொள்ளப்படும்.
இதன் காரணமாகவே தேசிய ஏ.ஐ. அலுவலகம் திறக்கப்பட்டுள்ளது. ஏ.ஐ. மூலம் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்வது தொடர்பான ஆய்வினை மேற்கொள்வது இதன் தலையாயப் பணிகளில் ஒன்றாகும் என்பதையும் அமைச்சர் விளக்கினார்.
இவ்விவகாரங்களை கையாளுவதற்கு ஏதுவாக சட்டங்களை
இயற்றுவது அல்லது நெறிமுறையை வரைவது போன்ற
அம்சங்களையும் இந்த தேசிய ஏ.ஐ. மையம், கவனத்தில் கொள்ளும் என்று கோபிந்த் சிங் குறிப்பிட்டார்.
ஏ.ஐ. வாயிலாக தனி மனித தரவுகள் கசிவதைத் தடுக்க
சிறப்புச் சட்டங்களை உருவாக்கும் அரசாங்கத்தின் நோக்கம் குறித்து இன்று மக்களவையில் ரொம்பின் உறுப்பினர் டத்தோ அப்துல் காலிப் அப்துல்லா எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அமைச்சர் கோபிந்த் சிங் இதனை தெரிவித்தார்.








