Apr 19, 2026
Thisaigal NewsYouTube
2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு  ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா
அரசியல்

2030-ஆம் ஆண்டிற்குள் 60 விழுக்காடு ஈபிஎஃப் உறுப்பினர்கள் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைய வாய்ப்பு: அமீர் ஹம்சா

Share:

ஊழியர் சேமிப்பு வாரியமான EPF உறுப்பினர்களில் சுமார் 60 சதவீதத்தினர், வரும் 2030-ஆம் ஆண்டிற்குள் தங்களின் 60 வயதில் 3 லட்சத்து 90 ஆயிரிம் ரிங்கிட் எனும் அடிப்படைச் சேமிப்பு இலக்கை அடைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இரண்டாம் நிதி அமைச்சர் டத்தோ ஸ்ரீ அமீர் ஹம்சா அஜிசான் தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்ற மேலவையில் கேள்வி-பதில் நேர அமர்வின் போது, செனட்டர் நிங் கெங் ஹெங் எழுப்பிய துணை கேள்விக்கு அமீர் ஹம்சா இவ்வாறு பதிலளித்தார்.

கடந்த 2025-ஆம் ஆண்டின் இறுதி நிலவரப்படி, முறைசார் துறையில் பணியாற்றும் 18 முதல் 55 வயதுக்குட்பட்ட மலேசியக் குடிமக்களில் சுமார் 3.1 மில்லியன் பேர் அல்லது 41.2 சதவீதத்தினர் தங்களின் வயதுக்கு ஏற்ற அடிப்படைச் சேமிப்பு அளவை எட்டியுள்ளனர்.

இருப்பினும், அதே துறையைச் சேர்ந்த எஞ்சிய 4.42 மில்லியன் உறுப்பினர்கள் அல்லது 58.8 சதவீதத்தினர் தங்களின் ஓய்வுக்காலத்திற்குத் தேவையான குறைந்தபட்ச சேமிப்பு இலக்கை இன்னும் எட்டவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஓய்வுக்காலத்திற்குத் தேவையான நிதி போதுமானதாக இருப்பதை உறுதி செய்ய அரசாங்கம் ஈபிஎஃப் மூலம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அவர் கூறினார். குறிப்பாக, முன்கூட்டியே பணத்தை மீட்கும் நடவடிக்கையினால் அடிப்படைச் சேமிப்பில் ஏற்படும் பாதிப்பைக் கட்டுப்படுத்த 'ஓய்வுக்கால வருமானப் போதுமான அளவு' எனும் புதிய அளவுகோல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் உறுப்பினர்களின் நிதிப் பாதுகாப்பை உறுதி செய்ய அரசாங்கம் உறுதிபூண்டுள்ளதாக அமைச்சர் அமீர் ஹம்சா தெரிவித்தார்.

Related News