Jul 22, 2026
Thisaigal NewsYouTube
முகுந்தன் உறுதி: அனுபவங்களை ஒருங்கிணைத்து சிரம்பான் ஜெயாவில் ஆக்கப்பூர்வமான சேவை
அரசியல்

முகுந்தன் உறுதி: அனுபவங்களை ஒருங்கிணைத்து சிரம்பான் ஜெயாவில் ஆக்கப்பூர்வமான சேவை

Share:

சிரம்பான் மாநகர் மன்றத்தின் துணை கவுன்சிலர் மற்றும் மாநில ஆட்சிக்குழு உறுப்பினரின் ஆய்வியல் அதிகாரி ஆகிய பதவிகளில் தாம் பெற்ற நிர்வாக அனுபவங்களை ஒருங்கிணைத்து, சிரம்பான் ஜெயா தொகுதி மக்களுக்கு மேலும் ஆக்கப்பூர்வமான சேவையாற்றப் போவதாக பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் எஸ். முகுந்தன் உறுதியளித்துள்ளார்.

சிரம்பான் ஜெயா சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் முதன்முறையாகக் களம் காணும் முகுந்தன், இத்தொகுதியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ பி. குணா ஆற்றிய மக்கள் சேவையைத் தொய்வின்றித் தொடரப் போவதாகக் குறிப்பிட்டார்.

இதுகுறித்து திசைகளிடம் பேசிய முகுந்தன், "கடந்த 2018 ஆம் ஆண்டு நெகிரி செம்பிலான் மாநிலத்தில் பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி அமைத்ததைத் தொடர்ந்து, 2019-இல் டத்தோ குணாவின் சிறப்பு அதிகாரியாகப் பணியாற்றும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் மூலம் மாநகர் மன்றத்தின் துணை கவுன்சிலராக நியமிக்கப்பட்டு, மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லும் ஒரு முக்கிய இணைப்புப் பாலமாக நான் செயல்பட்டிருக்கிறேன்," என்றார். மேலும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் ஜே. அருள்குமாரின் ஆய்வியல் அதிகாரியாகப் பணியாற்றிய அனுபவமும் தமக்கு இருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார். எனவே டத்தோ குணா ஆற்றிய சேவை தொடரும் அதேவேளையில் தொகுதி மக்களுக்காக பல்வேறு முன்னெடுப்புகளையும் எடுக்கப் போவதாக முகுந்தன் குறிப்பிட்டார்.

ஒரு பட்டதாரி பொறியியலாளரான முகுந்தன், தாம் பெற்ற இந்த இரட்டை நிர்வாக அனுபவங்கள், தொகுதி மக்களின் தேவைகளை அடிமட்ட அளவில் இருந்து புரிந்துகொள்ள உதவியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். வரும் தேர்தலில் தாம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் இந்த அனுபவங்களை முழுமையாகப் பயன்படுத்தி, தேவையான சீர்திருத்தங்களுடன் புதிய முன்னெடுப்புகளைச் தொகுதிக்குள் கொண்டு வரப் பாடுபடப் போவதாகத் தெரிவித்தார்.

Related News