கோலாலம்பூர், டிசம்பர்.19-
நாடாளுமன்றத்தில், சிலாங்கூர் மற்றும் திரங்கானு மாநிலங்களைப் பிரதிநிதித்துப் போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் இல்லாத நிலையில், சபா, சரவாக் மாநிலங்களைப் பிரதிநிதித்து அதிக அளவில் இருப்பதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சிலாங்கூரில் சுமார் 2.9 மில்லியன் வாக்காளர்களும், 22 நாடாளுமன்ற தொகுதிகளும் உள்ள நிலையில், திரங்காணுவில் 9 லட்சத்து 31 ஆயிரம் வாக்காளர்களும், எட்டு தொகுதிகளும் உள்ளதாக தேர்தல் ஆணைய துணைத் தலைவர் அஸ்மி ஷாரோம் தெரிவித்துள்ளார்.
இதன் படி, சிலாங்கூரில் 1 லட்சத்து 32 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு எம்.பி என்ற நிலையிலும், திரங்கானுவில் 1 லட்சத்து 16 ஆயிரம் வாக்காளர்களுக்கு ஒரு எம்.பி என்ற நிலையிலும், வாக்காளர் - எம்பி விகிதம் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதே வேளையில், சபாவில் 76,000 வாக்காளர்களுக்கு ஒரு எம்.பி என்ற விகிதத்தில், 1.9 மில்லியன் வாக்காளர்கள் மற்றும் 25 தொகுதிகள் உள்ளதாகவும் அஸ்மி ஷாரோம் தெரிவித்துள்ளார்.
சரவாக்கை எடுத்துக் கொண்டால், 65,000 வாக்காளர்களுக்கு ஒரு எம்.பி என்ற விகிதத்தில், 2 மில்லியன் வாக்காளர்கள் மற்றும் 31 தொகுதிகள் உள்ளதாகவும் அவர் பட்டியலிட்டுள்ளார்.
தேசிய அளவில், 95,000 வாக்காளர்களுக்கு ஒரு எம்.பி என்ற நிலையில் அமைந்துள்ளதாகவும் அஸ்மி ஷாரோம் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சமநிலையின்மையானது தற்போதுள்ள சட்டங்களுக்கு முரணானதல்ல என்றாலும் கூட, ஒரு தொகுதியின் புவியியல் பரப்பளவையும் தேர்தல் ஆணையம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








