Jul 23, 2026
Thisaigal NewsYouTube
நிலையான ஆட்சி அமைந்தால் மட்டுமே நீடித்த வளர்ச்சி சாத்தியம்: ரெப்பா வேட்பாளர் எஸ். வீரப்பன் வலியுறுத்தல்
அரசியல்

நிலையான ஆட்சி அமைந்தால் மட்டுமே நீடித்த வளர்ச்சி சாத்தியம்: ரெப்பா வேட்பாளர் எஸ். வீரப்பன் வலியுறுத்தல்

Share:

நெகிரி செம்பிலான் மாநில அரசின் வருடாந்திர வருமானம் அதிகர்த்து வரும் நிலையில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் தொடர்ந்து ஆதரவளித்தால் மட்டுமே மக்கள் நலன் சார்ந்த வளர்ச்சித் திட்டங்களை எவ்விதத் தொய்வும் இன்றி மாநில அரசாங்கத்தினால் தொடர்ந்து முன்னெடுக்க முடியும் என்று ஜசெக சார்பில் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளராக ரெப்பா தொகுதியில் போட்டியிடும் எஸ். வீரப்பன் தெரிவித்தார்.

முன்னைய ஆட்சிக்காலத்தில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கச் சார்பு நிறுவனங்களான ஜிஎல்சியில் மிகக் குறைந்த சேமிப்புகளையே கொண்டிருந்ததோடு, பல நிறுவனங்கள் பெரும் நஷ்டத்திலும் இயங்கி வந்தன என்பதை வீரப்பன் சுட்டிக்காட்டினார். ஆனால், 2018ஆம் ஆண்டில் பக்காத்தான் ஹராப்பான் தலைமையில் மாநிலத்தில் ஒரு முழுமையான அரசாங்கம் அமைந்த பின்னர், மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களால் இன்று மாநில அரசின் ஜிஎல்சி நிறுவனங்கள் லாபகரமாக மாற்றமடைந்துள்ளன.

குறிப்பாக, நெகிரி செம்பிலான் அறக்கட்டளை போன்ற அமைப்புகள் தற்போது நல்லதொரு வருவாயை ஈட்டத் தொடங்கியுள்ளன. இதன் மூலம், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி அரசாங்கத்தால் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை எளிய பிள்ளைகளுக்கு, குறிப்பாக கல்வி ரீதியாக நிறைய நிதியுதவிகளையும் கல்வி உதவித்தொகைகளையும் தடையின்றி வழங்க முடிகிறது என்று வீரப்பன் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் பொருளாதாரம் மற்றும் கல்வித்துறை மேம்பாட்டை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்ல பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு மக்கள் பலமான ஆதரவை வழங்க வேண்டும். அரசியல் நிலைத்தன்மையும், நிர்வாகத் திறமையும் கொண்ட ஒரு நிலையான ஆட்சி அமைந்தால் மட்டுமே இத்தகைய மக்கள் நலத்திட்டங்கள் அனைத்தும் எதிர்காலத்திலும் எவ்விதத் தொய்வுமின்றித் தொடர முடியும். இதுவே தங்களின் எதிர்பார்ப்பாகும் என்று ரெப்பா தொகுதியில் நேரடிப் போட்டியை எதிர்நோக்கியுள்ள வீரப்பன் வலியுறுத்தியுள்ளார்.

Related News