சில தரப்பினர் அம்னோவை ஒற்றுமை அரசாங்கத்திலிருந்து வெளியேறுமாறு சவால் விடுப்பதை தவிர்க்க வேண்டும் என அதன் தலைவரும், துணைப் பிரதமருமான டத்தோ ஶ்ரீ டாக்டர் அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி எச்சரித்துள்ளார்.
ஆரம்பத்தில் பக்காத்தான் ஹராப்பான் வசம் 82 தொகுதிகளும், பாரிசான் நேஷனல் வசம் 30 தொகுதிகளும் என மொத்தம் 112 தொகுதிகளின் ஆதரவுடன் நடப்பு அரசாங்கம் அமைந்ததாகக் கூறிய ஸாஹிட், பின்னர் பிற கட்சிகள் இணைந்ததால் தற்போது 18 கட்சிகளின் ஆதரவு இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அந்த ஆரம்பக்கட்ட 112 இடங்களின் ஆதரவு இல்லாத நிலை ஏற்பட்டால், மக்களிடம் புதிய ஆணையைப் பெறும் நிலை ஏற்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதன்படி, பொதுத்தேர்தலை நடத்துவது அல்லது நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு நடத்துவது என இரண்டு வழிகள் மட்டுமே இருப்பதாகவும் ஸாஹிட் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "துணிச்சல் இருந்தால் இப்போதே பொதுத்தேர்தலை நடத்துங்கள்" என்றும் இன்று சனிக்கிழமை 2026 அம்னோ பொதுப் பேரவையில் உரையாற்றிய ஸாஹிட் சவால் விடுத்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில்,பொதுப் பேரவையில் கூடியிருந்த பிரதிநிதிகள் “பூலாய்!” என ஒருமித்த குரலில் முழக்கமிட்டனர்.








