குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ளும் கட்சித் தலைவர்களுக்கு ஆதரவளிப்பதில் எந்த அவமானமும் இல்லை என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே தெரிவித்துள்ளார்.
முன்னாள் தபுங் ஹாஜி தலைவர் அப்துல் அஸீஸ் அப்துல் ராஹிம் அதிகார துஷ்பிரயோகக் குற்றச்சாட்டை எதிர்கொள்வதைச் சுட்டிக் காட்டிய அவர், குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மட்டும் ஒருவர் குற்றவாளி எனக் கருத முடியாது என்று தெரிவித்துள்ளார்.
நேற்று அம்னோ இளைஞர் பொதுக்குழுவில் உரையாற்றிய அவர், குற்றச்சாட்டுகளை மட்டுமே எதிர்கொள்ளும் அம்னோ தலைவர்களை எண்ணி எதற்காக வெட்கப்பட வேண்டும்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், கட்சித் தலைவர்கள் இன்னும் நீதிமன்றத்தால் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்படவில்லை என்றும், அவர்களுக்கு தார்மீக ஆதரவை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.








