நெகிரி செம்பிலான் மந்திரி பெசார் இஸ்மாயில் லாசிம், மாநில ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் துவாங்கு முனாவிரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரும் பிரகடனத்தில் தான் விருப்பமின்றியும் கட்டாயப்படுத்தப்பட்டும் கையெழுத்திட்டதாக கூறியுள்ள நிலையில், இது தொடர்பாக அவரை கட்சி பொதுக்குழுவின் போது நேரில் சந்தித்து விளக்கம் கேட்கப் போவதாக அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 8-ஆம் தேதி நான்கு உண்டாங் தலைவர்கள் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், கடந்த ஆகஸ்ட் 3-ஆம் தேதியிட்ட அந்த ஆவணத்தை வெளியிட்டனர்.
ஆனால் அதன் சட்டப்பூர்வத்தன்மையை இஸ்மாயில் நிராகரித்ததுடன், மாநில ஆட்சியாளர் மீதான தனது விசுவாசத்தையும் உறுதிப்படுத்தினார்.
மேலும், துவாங்கு முஹ்ரிசைப் பதவி நீக்க முயன்ற விவகாரத்தில் ஸாஹிட்டுக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டையும் அவர் மறுத்தார்.
இதனிடையே, அம்னோவின் மூத்த தலைவர் ஒருவர் கட்சிப் பொதுக்குழுவுக்குப் பின்னர் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தால் கைது செய்யப்படலாம் என்ற தகவல் குறித்து தமக்கு அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் ஸாஹிட் தெரிவித்துள்ளார்.
வலுவான ஆதாரங்கள் இருந்தால் எஸ்பிஆர்எம் விசாரணைக்கு அம்னோ முழுமையாக ஒத்துழைக்கும் என்றும், விசாரணை நியாயமாகவும் வெளிப்படையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.








