எதிர்வரும் மலாக்கா மாநிலத் தேர்தலை வலிமையுடன் எதிர்கொள்ளும் வகையில், பக்காத்தான் ஹராப்பான், அதன் பல்வேறு சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து, அதற்கு ஏற்ப தனது தேர்தல் இயந்திரத்தைத் தயார்படுத்தி வருவதாக பக்காத்தான் தேர்தல் இயக்குநரும் சிலாங்கூர் மாநில மந்திரி பெசாருமான டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் மற்றும் பாரிசான் நேஷனல் இடையே மலாக்கா தேர்தல் தொடர்பாக இதுவரை எந்த ஓர் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தைகளும் தொடங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக, பாரிசான் உடனான ஒத்துழைப்பு இல்லாமல் தனித்துப் போட்டியிடுவது உள்ளிட்ட பல்வேறு சூழ்நிலைகளையும் பக்காத்தான் ஹராப்பான் கருத்தில் கொண்டு வருவதாக அமிருடின் தெரிவித்துள்ளார்.
மேலும், ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்களில் பக்காத்தான், பாரிசானிலிருந்து தனித்து போட்டியிட்டதைச் சுட்டிக் காட்டிய அவர், மலாக்கா தேர்தலிலும் அதே நிலை தொடருமா அல்லது வேறுபட்ட அணுகுமுறை பின்பற்றப்படுமா என்பது குறித்து அடுத்த சில நாட்களில் பக்காத்தானின் உயர்மட்டக்குழு பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிவு செய்யும் என்றார்.
இதனிடையே கூட்டணி கட்சிகளுக்கு இடையிலான தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைகள் வழக்கமாக வேட்புமனு தாக்கல் நாள் வரை தொடரக்கூடும் என்றும், இருப்பினும் தேவை ஏற்பட்டால் அதற்கு முன்பாகவே முடிவுகளை எடுக்கத் தயாராக இருப்பதாகவும் அமிருடின் தெரிவித்துள்ளார்.
மலாக்காவில் மொத்தம் 28 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த மாநிலத் தேர்தலில் பாரிசான் 21 தொகுதிகளில் வெற்றி பெற்று மாநில ஆட்சியை அமைத்தது. அதேவேளையில் பக்காத்தான் ஹராப்பான் 5 தொகுதிகளிலும், பெரிக்கத்தான் நேஷனல் 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தன.
தற்போதைய மலாக்கா மாநில அரசின் பதவிக்காலம் டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைவதால், அடுத்த மாநிலத் தேர்தலுக்கான அரசியல் நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ளன.








