கடந்த 2014-ஆம் ஆண்டு மலேசிய அரசாங்கத்தைக் கவிழ்க்க அமெரிக்க அதிகாரிகள் உதவி வழங்க முன்வந்ததாக பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கூறியதைத் தொடர்ந்து, பிகேஆர் கிளைத் தலைவர்கள் மூன்று போலீஸ் புகார்களை அளித்துள்ளனர்.
பண்டார் துன் ரஸாக் பிகேஆர் கிளையின் உதவித் தலைவர் வி. ஜோனாதன், மகளிர் பிரிவுத் தலைவி மஸ்லினா ஒஸ்மான், இளைஞர் பிரிவுத் துணைத் தலைவர் அமாருல் ஹிஷாம் ஜாலில் ஆகியோர் புகார் அளித்துள்ளனர்.
கடந்த 2014-ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியாவிற்கு வருகை புரிந்த போது, கோலாலம்பூர் அமெரிக்கத் தூதரகத்தில் நடந்த சந்திப்பில் சில பாஸ் தலைவர்களுக்கு இந்த உதவி தொடர்பான முன்மொழிவு வழங்கப்பட்டதாக ஹாடி அவாங் தெரிவித்திருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு மிகவும் தீவிரமானது எனக் கூறிய பிகேஆர் தலைவர்கள், அரசாங்கத்தையும், நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பையும் அரசியலமைப்புக்கு எதிரான வழிகளில் கவிழ்க்க அல்லது பலவீனப்படுத்த முயற்சி நடந்ததா? என்பதை சட்டப்படி விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதனிடையே, ஹாடி அவாங் கூறியது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என கோலாலம்பூரில் உள்ள அமெரிக்க தூதரகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.








