ஒற்றுமை அரசாங்கம் தனது சீர்திருத்தத் திட்டங்களை நிறைவேற்ற இன்னும் 15 மாதங்கள் இருப்பதால், 16-வது பொதுத்தேர்தலை அவசரமாக நடத்த வேண்டிய அவசியமில்லை என ஜசெக பொதுச் செயலாளர் அந்தோனி லோக் தெரிவித்துள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நாடாளுமன்றத்தைக் கலைத்து முன்கூட்டியே தேர்தலை நடத்த வேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுறுத்தி வரும் நிலையில் அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மற்றும் மலாக்கா மாநிலத் தேர்தல்களைத் தொடர்ந்து, பிரதமருக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்து இத்தகைய அழுத்தங்கள் அதிகரித்துள்ளதாக அந்தோணி லோக் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், மக்களவையில் அன்வார் பெரும்பான்மை ஆதரவைத் தொடர்ந்து பெற்றிருக்கும் வரை, இத்தகைய அழுத்தங்களுக்கு அவர் பணியக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு 15-வது பொதுத்தேர்தலுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட ஒற்றுமை அரசாங்கம், தற்போதைய ஆட்சிக்காலத்தின் எஞ்சிய காலத்தைப் பயன்படுத்தி மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளுக்கு இடையே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், அவை ஒன்றிணைந்து நாட்டை தொடர்ந்து ஆட்சி செய்ய முடியும் என்பதையும் அந்தோணி லோக் சுட்டிக் காட்டியுள்ளார்.








