ஊழல் அல்லது அதிகார துஷ்பிரயோக வழங்குகளில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவர்கள், குறிப்பாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்கள், நீதிமன்றம் விதித்த முழுத் தண்டனையையும் அனுபவிக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டை பக்காத்தான் ஹராப்பான் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பக்காத்தான் ஹராப்பானின் செயலவை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல், முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகத்திற்கு எதிரான போராட்டத்தில் கூட்டணி தொடர்ந்து உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்ட எந்தத் தரப்பினரிடமும் சமரசமின்றி விசாரணை நடத்த வேண்டும் என்ற மாமன்னரின் உத்தரவையும் பக்காத்தான் ஹராப்பான் முழுமையாக ஆதரிப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், சட்டத்தின் ஆட்சி நிலைநிறுத்தப்பட வேண்டும் என்றும், நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்குகள் எந்தவித வெளிப்புற தாக்கமும் இல்லாமல் சுதந்திரமாகவும் முறையாகவும் முடிவடைய அவற்றுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
நீதித்துறை நடவடிக்கைகள் முடிவடையும் முன்பே வேறு காரணிகளால் முடிவு செய்யப்பட்டு விட்டது போன்ற எந்தவொரு தோற்றமும் ஏற்படக்கூடாது என்றும் பக்காத்தான் ஹராப்பான் தெரிவித்துள்ளது.








