பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசாங்கம் பலவீனமாக இருப்பதாக அம்னோ விமர்சித்தால், அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அம்னோவும் தோல்வியடைந்ததாகவே அர்த்தம் என அமனா பொதுச் செயலாளர் ஃபையிஸ் ஃபாட்சில் தெரிவித்துள்ளார்.
அம்னோ பொதுப் பேரவையில், தங்கள் கட்சி இன்னும் சிறப்பாக செயல்பட முடியும் என அதன் தலைவர் டத்தோ ஶ்ரீ அஹ்மாட் ஸாஹிட் ஹாமிடி கூறியிருந்தார்.
இதற்கு பதிலளித்த ஃபையிஸ், அன்வார் அரசின் செயல்பாடுகள் குறித்து விமர்சிப்பது, அரசுக்கு ஆதரவளிப்பதில் ஸாஹிட் தோல்வியடைந்ததை வெளிப்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அரசாங்கம் பல கட்சிகளின் கூட்டணியில் அமைந்துள்ளதால், அதன் செயல்பாடுகளை கூட்டாகவே மதிப்பிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெளிநாட்டு நேரடி முதலீடு, ரிங்கிட் மதிப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஊழல் குறியீடு உள்ளிட்ட தரவுகள், முந்தைய அரசாங்கங்களைக் காட்டிலும் அன்வார் தலைமையிலான அரசாங்கத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதை காட்டுவதாகவும் ஃபையிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும், முந்தைய பாரிசான் நேஷனல் அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட ஜிஎஸ்டி தொடர்பான நிலுவையில் இருந்த 19 பில்லியன் ரிங்கிட் பணத்தை அன்வார் அரசு முழுமையாகத் திருப்பிச் செலுத்தியதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அரசியல் நிலைத்தன்மையை தற்போதைய ஆட்சிக்காலம் முடியும் வரை பாதுகாக்க அம்னோ உண்மையாக விரும்பினால், அரசாங்கத்தை சீர்குலைக்கும் வகையிலான கருத்துகளை வெளியிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் ஃபையிஸ் எச்சரித்துள்ளார்.








