முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் ரஸாக்கிற்கு பொதுமன்னிப்பு கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் என அம்னோ திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
அரசியலமைப்பு மற்றும் சட்டத்தில் உள்ள அனைத்து வழிகளையும் பயன்படுத்தி, நஜிப்பின் மன்னிப்பு மனு நியாயமான முறையில் பரிசீலிக்கப்படுவதை உறுதி செய்வோம் என அம்னோ பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஷ்ரஃப் வஜ்டி டுசுகி தெரிவித்துள்ளார்.
நஜிப்பின் மன்னிப்பு மனுவானது கோலாலம்பூர், லாபுவான் மற்றும் புத்ராஜெயா ஆகிய மன்னிப்பு வாரியத்தின் அடுத்த கூட்டத்தில், தேவையற்ற தாமதமின்றி பரிசீலிக்கப்படும் என அம்னோ எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
நஜிப்புக்காக நீதி கேட்பது சட்டத்தையோ நிறுவனங்களையோ சவால் செய்வது அல்ல என்று குறிப்பிட்டுள்ள அஷ்ரஃப் வஜ்டி, அவருக்கு நியாயமான நீதி கிடைக்க அம்னோ அவருக்குப் பக்கபலமாக இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மன்னிப்பு வழங்கும் அதிகாரம் தொடர்பாக அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து நடைமுறைகளையும், மாமன்னர் சுல்தான் இப்ராகிமின் பதவியையும் அம்னோ முழுமையாக மதிப்பதாகவும் அஷ்ரஃப் வஜ்டி தெரிவித்துள்ளார்.








