கோலாலம்பூர், பிப்ரவரி.11-
தலைமைக்கு கீழ்படியாமை, விசுவாசமின்மை போன்ற பிரச்சினைகள் தொடர்பில், பெர்லிஸ் மாநில பாஸ் கட்சியின் மாநில மற்றும் மத்திய உறுப்பினர்களுக்கு, அக்கட்சியின் தேசியத் தலைவர் அப்துல் ஹாடி அவாங் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த 2022-ஆம் ஆண்டு, பாஸ் கட்சியின் தேர்தல் வெற்றிக்குப் பிறகு, மாநிலத்திலிருந்து பெறப்பட்ட புகார்களை தேசிய தலைமை விசாரணை செய்ததாக, கட்சி உறுப்பினர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஹாடி அவாங் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில், தார்மீக மற்றும் நிர்வாக முறைகேடு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நம்பகமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றாலும் கூட, சில உறுப்பினர்கள் மாநிலத் தலைமையின் முடிவுகளுக்கு எதிராக வெளிப்படையான அதிருப்தியை வெளிப்படுத்தியது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும் ஹாடி தெரிவித்துள்ளார்.
மேலும், பாஸ் கட்சியை உள்கட்சிப் பூசல் கொண்டு பலவீனப்படுத்துவதையும், பெர்லிஸ் மாநில அரசாங்கத்தைக் கவிழ்க்க முயற்சிப்பதையும் நோக்கமாகக் கொண்ட நெறிமுறையற்ற பரப்புரையை ஹாடி கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு ஒழுக்கத்தைப் பேணவும் ஹாடி வலியுறுத்தியுள்ளார்.








