கோலாலம்பூர், ஜனவரி.02-
டான் ஶ்ரீ முகைதீன் யாசின் பதவி விலகியதையடுத்து பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக்கு தலைமை வகிக்கப் போவது யார்? என்ற கேள்வி, கடந்த இரண்டு நாட்களாக பெர்லிஸ் அரசியல் வட்டாரங்களில் பேசும் பொருளாக இருந்து வந்தது.
இந்நிலையில், அக்கூட்டணிக்கு பாஸ் கட்சித் தலைமை ஏற்கப் போவதை அதன் தலைவர் டான் ஶ்ரீ அப்துல் ஹாடி அவாங் இன்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து, அடுத்த வாரம், பெர்சாத்து தலைவர் முகைதீன் யாசின் உட்பட, கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் கலந்தாலோசிக்கப் போவதாகவும் ஹாடி குறிப்பிட்டுள்ளார்.
பெரிக்காத்தான் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் தகுதியுடைய உறுப்பினர்கள் பாஸ் கட்சியில் இருப்பதைச் சுட்டிக் காட்டிய ஹாடி அவாங், விரைவில் அவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, கூட்டணிக்கு, ஹாடி அவாங் தலைமை ஏற்பார் என சில தரப்பினர் கூறி வந்ததை மறுத்த அவர், வயது மூப்பின் காரணமாக தன்னால் அப்பொறுப்பை ஏற்க இயலாது என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, கூட்டணிக்குத் தலைமை ஏற்க பாஸ் கட்சியின் தேர்தல் இயக்குநர் சனூசி நோர்தான் தகுதியானவர் என அக்கட்சி வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது.
சிலாங்கூர் பாஸ் இளைஞர் பிரிவு உட்பட, சனூசி நோருக்கு ஆதரவாக சில தரப்பினர் அவரது பெயரை முன்மொழிந்தனர்.
அதே வேளையில், பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராஹிம் துபான் மான் மற்றும் உதவித் தலைவர் அஹ்மாட் சம்சூரி மொக்தார் ஆகியோரின் பெயரும் கூட்டணித் தலைவர் பதவிக்கு முன்மொழியப்பட்டது.
இந்நிலையில், தமக்கு தலைமை ஏற்கும் ஆசை இல்லை என்றும், தம்மை விட சம்சூரி மொக்தாரே அதற்குத் தகுதியானது என்றும் சனூசி நோர் தெரிவித்துள்ளார்.








