Sep 24, 2026
Thisaigal NewsYouTube
நிலைப்பாடு மாறியது ஏன்? — நெகிரி மந்திரி புசாரிடம் தெங்கு ஸஃப்ருல் கேள்வி
அரசியல்

நிலைப்பாடு மாறியது ஏன்? — நெகிரி மந்திரி புசாரிடம் தெங்கு ஸஃப்ருல் கேள்வி

Share:

நெகிரி செம்பிலான் மந்திரி புசார் டத்தோ இஸ்மாயில் லாசிம், ஆட்சியாளர் துவாங்கு முஹ்ரிஸ் தொடர்பான பிரகடனம் குறித்த தமது நிலைப்பாட்டை மாற்றியது ஏன் என்பதை விளக்க வேண்டும் என்று பிரதமரின் மூத்த அரசியல் ஆலோசகர் தெங்கு ஸஃப்ருல் அப்துல் அஸிஸ் கேட்டுள்ளார்.

ஆகஸ்ட் 3 ஆம் தேதி பிரகடனத்தில் கையெழுத்திட்ட இஸ்மாயில், செப்டம்பர் 6ஆம் தேதி துவாங்கு முஹ்ரிஸுக்கு முழு ஆதரவையும் விசுவாசத்தையும் தெரிவித்ததாக தெங்கு ஸஃப்ருல் கூறினார். ஆனால், செப்டம்பர் 9 ஆம் தேதி தாம் விருப்பமின்றியும் நிர்ப்பந்தத்தின் பேரிலும் கையெழுத்திட்டதாகக் கூறி போலீசில் புகார் செய்ததாக அவர் சுட்டிக் காட்டினார்.

அதன் பின்னர், செப்டம்பர் 15ஆம் தேதி இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற ஆட்சிக்குழு கூட்டத்தில் அந்தப் பிரகடனம் செல்லுபடியாகும் என்றும் நடைமுறையில் இருப்பதாகவும் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

இதனைச் சுட்டிக் காட்டிய தெங்கு ஸஃப்ருல், இஸ்மாயில் தமது நிலைப்பாடு மாறவில்லை என்றும், நிலைமை மாற்றத்தை ஏற்படுத்திவிட்டதாகவும் கூறியிருப்பதை கேள்விக்குள்ளாக்கினார். “டத்தோ இஸ்மாயில், உண்மையில் என்ன மாறியது?” என்று அவர் சமூக ஊடகப் பதிவில் கேள்வி எழுப்பினார்.

Related News